புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

ஈஷா யோகா - உறுதியின் பாதை



நீங்கள் முதலில் உணர வேண்டியதே, நீங்கள் சில குறுகிய எல்லைகளுக்குள் இயங்குகிறீர்கள் என்பதைத்தான். உங்கள் நம்பிக்கைகள்தான் உங்களை அதிகம் ஏமாற்றுகின்றன. கடவுளை நம்புவதாக நினைக்கிறீர்கள். அச்சமின்றி வாழ்வதாக எண்ணுகிறீர்கள். ஆனால் அடுத்த வீட்டு நாய் துரத்தினால்கூட அலறிக் கொண்டு ஓடுகிறீர்கள்.

உங்களை பாதுகாப்பாக உணரச்செய்யும் உங்கள் நம்பிக்கைகளைப் போல் உங்களை ஏமாற்றக் கூடிய விஷயம் எதுவுமில்லை. எனவே, அச்சம், பதட்டம் ஆகிய குறுகிய எல்லைகளுக்குள் நீங்கள் வாழ்வதை முதலில் உணர வேண்டியது அவசியம். சொல்லப்போனால் உங்கள் அடிப்படை உணர்வே அச்சம்தான்.

ஏறக்குறைய எல்லா உணர்வுகளுமே அச்சத்திலிருந்துதான் உங்களுக்குத் தோன்றுகின்றன. நீங்கள் அன்பை உணர்ந்ததில்லை. ஆனால் அச்சத்தை உணர்ந்திருக்கிறீர்கள். இருவர் தங்களுக்குள் இருக்கும் அச்ச உணர்வை சமன் செய்து கொள்வதைத்தான் அன்பு என்றும் காதல் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப் பயிற்சி மேற்கொண்டாலும், தொழிலில் ஈடுபட்டாலும், கார் ஓட்டினாலும், காலாற நடந்தாலும், உங்களுக்குள் அச்சம் இருந்து கொண்டேயிருக்கிறது. அதீதமான சில சூழல்களில்தான் உங்களுக்குள் அச்சம் இருப்பதையே உணர்கிறீர்கள்.
எல்லா நேரங்களிலும் ஒருவர் மகிழ்ச்சியாகக் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒருநாள் அவர் ஒரு விபத்துக்கு ஆளாகிவிட்டால் அடுத்த முறை காரோட்ட அமரும்போதே கடவுளைக் கூப்பிடுகிறார். இப்போதுதான் அவருக்குள் அச்சம் தோன்றியிருப்பதாக அர்த்தமில்லை. இத்தனைநாள் இருந்த அச்சம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

எனவே அச்சம் உங்கள் அடிப்படை உணர்வாக இருந்து வந்திருக்கிறது. சொல்லப்போனால் அச்சத்தின் மொத்த உருவமே நீங்கள்தான். அச்சம் வெளிப்படாதிருக்கும் விதமாக சில சூழல்களை உருவாக்கினீர்கள். அதையும் மீறி அச்சம் சிலநேரங்களில் வெளிப்பட்டுவிடுகிறது.
அச்சத்தைக் கடக்கவும், நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் தொடர்ந்து நடையிடவும் உங்களுக்கு வேண்டியிருப்பதெல்லாம் உறுதி மட்டுமே. ஏனெனில் உங்கள் நம்பிக்கை நிலையில்லாதது. ஏதேனும் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டால் உங்கள் அடிப்படை நம்பிக்கை ஆவியாகிவிடும். ஆனால் உங்களால் உறுதியுடன் செயல்பட முடியும். அதனால்தான் ஈஷா யோகாவில் முதல் வகுப்பிலிருந்தே உங்களுக்குள் இந்த உறுதியை ஏற்படுத்துகிறோம். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஏழு நாட்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்வது என்கிற உறுதி உங்களுக்குள் ஏற்படுகிறது.

அதன்பிறகு அந்தப் பயிற்சியை மூன்றாண்டுகள் தொடர்வது என்கிற உறுதியை ஏற்படுத்துகிறீர்கள். அதுவும் சாத்தியமாகிவிட்டால் அந்த உறுதியை முப்பதாண்டுகளுக்கு நீட்டிக்கிறீர்கள். அதன்பிறகு என்ன நடந்தாலும் அந்தப் பயிற்சிகளை விட்டு விலகாத உறுதி உங்களுக்குள் மலர்கிறது. இப்படித்தான் உங்கள் குறுகிய எல்லைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் நீங்கள் விடுபட வேண்டும்.

நம்பிக்கையே இல்லாமல் நம்பிக்கை பற்றிப் பேசுவது, வீண் விரயமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த உறுதியை ஏற்படுத்திக் கொண்டால் நம்பிக்கை உங்களுக்குள் நிகழத் தொடங்கும். நீங்கள் இல்லாமல் போகிறபோதுதான் நம்பிக்கை நிகழ்கிறது. உங்களை விட இன்னொன்று முக்கியம் என்கிற நிலையில்தான் நம்பிக்கை மலர்கிறது.

உங்கள் உள்நிலை அனுபவம் உயர உயர, "என்னை நரகத்திற்கு நீங்கள் கொண்டு சென்றாலும் பரவாயில்லை" என்கிற உறுதியை எட்டுகிறீர்கள். அதன்பிறகு நீங்கள் அடைய வேண்டிய நிலையைத் தாமாகவே அடைகிறீர்கள். எனவே உங்கள் தடைகளை நீங்கள் உதிர்க்கும் சூழலை உருவாக்குவது ஒன்றே என் வேலை. மற்றவை தாமாகவே நிகழும்.
உங்களுக்கு ஈஷா யோகா பயிற்சிகள் தரப்படும்போது, உங்களுக்கு பயிற்சிகள் மாத்திரம் தரப்படவில்லை. எப்படி மூச்சைப் பிடிப்பது, எப்படி மூச்சு விடுவது எப்படி உடம்பை வளைப்பது போன்றவை மட்டுமல்ல பயிற்சி. சில சூழல்களை உருவாக்கி, உங்களுக்குள் திறந்த நிலையை ஏற்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம்.

பயிற்சி மட்டுமின்றி இந்தப் பாதையில் உங்கள் உறுதியை வலுப்படுத்துவதே இதன் தலையாய நோக்கம். ஏழு நாட்களில் ஈஷா யோகா என்றால் என்னவென்று ஒருவேளை நீங்கள் அறிவுப்பூர்வமாக மட்டுமே புரிந்து கொண்டிருந்தாலும், அடுத்த ஏழாண்டுகளுக்குள் அது உங்கள் வாழ்க்கை அனுபவமாக மலர்வது, உங்கள் உறுதிப்பாட்டில்தான் இருக்கிறது. உங்கள் உறுதியே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு ஏழுநாட்கள் வேண்டுமா, ஏழு விநாடிகள் வேண்டுமா அல்லது ஏழு பிறவிகள் வேண்டுமா என்பதெல்லாம் உங்களின் ஏற்கும் தன்மையைப் பொறுத்தது. உடம்பு என்கிற அடித்தளத்தை நீங்கள் முயன்று வளர்த்தீர்கள். எல்லாச் சுவர்களும் எழுந்ததென்னவோ இந்த அடித்தளத்தின் மீதுதான். 'நான்' என்ற அடையாளம் நீங்கள் உருவாக்கிய அடித்தளம். அதனை அசைக்கிற போது மற்ற சுவர்களைத் தகர்க்க முடிகிறது.

முழுமையாக ஏற்கும் தன்மை உங்களுக்குள் மலர்ந்தால், உங்கள் சுவர்களை உங்களால் உடனே தகர்க்க இயலும். அதற்கான கருவிகளை உங்கள் கைகளில் தருவதற்கே இந்த யோகப் பயிற்சிகள். உங்கள் கைகளில் தரப்படும் கருவிகளில் ஒன்றை நீங்கள் உறுதியுடன் பயன்படுத்தினாலே புத்தம் புதிய பாதை ஒன்று மலர்வதையும், உங்கள் சுவர்கள் உடைவதையும் உணர்வீர்கள்.
Download As PDF

பிரபலமான கட்டுரை